என் விளையாட்டு!

கோல்ப்-ம் டென்னிஸ்-ம்
பழக்க மில்லை...
சொல்லப் போனால்
பள்ளிப் பருவம்வரை
பார்த்த தில்லை!
நமக்கு-
கிட்டிப் புல், பம்பரம்
வீதி சமைத்தோம்...
குண்ட டித்தோம்!
குழி நோண்டி-கோல்
யடித்தோம்!
கபடிக் கபடி
பாடிப் பாடி-மூச்சிரைத்தோம்
அக்காவோடு தாயம்
தங்கையோடு பாண்டி
யாடினோம் -டயர்வண்டி
விரும்பி யோட்டினோம்!
பள்ளியில் கிரிகெட்டு
மட்டை யேது கட்டைதான்
பரீட்சை அட்டைதான்...
காகித பந்து-காய்ந்த
சோளத் கட்டை
ரப்பர் பந்து கூட
நாள் சென்றபின் தான்!
அஞ்சு பைசா அளவானது
ஐம்பது பைசா இருந்தா
பணக்காரனாக்கும்...

அஞ்சு பைசா-மிட்டாய்
அன்றை பொழுது-ம்
இனிப்பாய் போகும்!
ஒரு சோளக் கதிரு
நாளெல்லாம் கூடவரும்!
குச்சி ஐஸ் குருவிரொட்டி
சக்கர மிட்டாய்-
தாத்தா கடை பேமஸ்சு!
ஆச்சி வந்தாலும் மாமா
வந்தாலும் -அந்த
வாரம் சேரக் கிடைக்கும்!

ஆசிரியர்கள் பல விதம்
தலையில் கொட்டுபவர்
வயிற்றில் கிள்ளுபவர்
பின் புஜத்தை திருகி...
மற்றொரு வர்
அடிஸ்கேலை திருப்பி
யடிக்கும் ஆசிரியை!
எப்படி ஞாபகம் இருக்கு பாரு...
வூட்டு பாடம் மறந்துபோகும்
விருந்தோம்பல் தொடர்ந்து நடக்கும்!
பனிஷ்மென்ட் பழகிப் போச்சு
திரும்ப எழுதறது
விருப்பமாச்சு!

பள்ளி விட்டா டியூசன்
அதை விட்டா வீடு
வந்ததும் திரும்ப படிப்பு
இப்படிச் சொல்ல ஆசைதான்...
அப்படி ஒன்றுமில்லை
பள்ளியில் விளையாடி
வீடுவந்தால் - வீதியில்
விளையாட்டு...
பாரதி சொன்னதில் பாதி நடக்கும்!
மாலை முழுவதும்
விளையாட்டு!

அம்மா குரல் அருகே வராது...
அப்பா வரும் வேளை
அய்யோ...
நோட்டு பிரித்து
புத்தகம் விரித்து
புழுவாய் ஊரிப் போவோம்!
மங்கலான வெளிச்சத்தில்
மங்கிப் போனோம்!
பின் தின்று
தூங்கிப் போனோம்!
நித்தம் செயல்
நித்திரை யில் தெரியும்!
நிஜமா இன்று
நினைக்கையில் தெரியும்....!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1