என் பாட்டி! நினைத்தேன் ஒரு வாட்டி!

கட்டு வெத்தலை
ஒத்த பொம்பளை
இருந்த தெம்புள...
வெட்டுப் பாக்கு
கெத்து காட்டும்
சிறிது சீவல்
தீர்ந்த ஆவல்
சேர்த்த சுன்னாம்பு ...
பிரியா புகையிலை
பகை ஆகவில்லை
போட்டு சுவைத்த வாயி
அவ பல்லெல்லாம் காவி!
அம்மச்சி அம்மத்தா
இடிச்சு சப்பத்தா(ன்)
அதைப் பாத்தா
அன்று அவமானம்
தெரியவில்லை அவ
வெகுமானம்!

பாக்கு வெத்தலை
பரிசத்திற்கு மட்டுமல்ல
உடற் பரி சுத்ததிற்கும்
உறவு பகிரும் சத்தத்திற்கும்!
வழிந்தோடும் நீர் உறிஞ்சி
வாய் கிழியப் பேசி
வாழ்க்கை சுத்தமாச்சு
வார்த்தை சொச்சமாச்சு

வலக்கை உரலிடிக்க
இடக்கை அத இடுக்க
இருவிரல் துடைத்தெடுக்க...
துவையலாய் உள் யிறங்க
மோவாய துடைச்சுகிட்டு
முகட்டோரம் ஒதுக்கிட்டு
வெல்லமாய் கரைய
மிளகுகாரம் மெதுவேற
படு மூச்சு இழப்பாக
மொத்தமா போட்டுத் துப்ப...

முத்தமா சிரித்திருந்தா(ள்)
மனம் மொத்தம் சிவந்திருப்பா(ள்)!
பல்லில்லா பருவத்திலும்
பக்குவமா உருவத்திலும்
பயத்தோடு பாசமும் கட்டில் கயத்தோடு வாசமும்
வசித்து வந்த நேசமும்
கதவோரம் வாசப்படி
காலோரம் கைத் தடி
இருமல் கூட செருக்கு
இடுப்போரம் சுருக்கு
நெல்லு வித்த சரக்கு
அதில் காசாத்தான் இருக்கு!

அனியாத ரவிக்கையும்
ஆட்டாத திருக்கையும்
ஆதரவற்று ஓரமாய்...
கம்பங் களியும் கவளச்
சோறும், கருவாட்டுச் சாறும்
கசந்துப் போய் காத்திருக்க...
நிலத்திற்கு பாரமாய்-இனி நானிருக்க
போவதில்லை!
பச்சை சீலை மடிவிலக
பாத்த மனசில் இடிவிழுக...
அம்மா யென அலறலோடு
ஆண்டவளாய் போனவளே! - அவ
மேதை இல்ல ஆள
கடைசி வரைக்கும்
விலகவில்லை சேல!

படிப்பறி வில்லை
பகுத்தறிவுச் சொல்ல
வாழ்க்கை யெல்லாம்
வாய் கணக்குத்தான்
வழக்கெல்லாம் பழமொழி
வாய் மணக்கத்தான்!
வாழ்வு பாடமாச்சு-அவுக
சாவு மனப் பாடமாய்
போச்சு...!
12 வயதில் படித்தது
52-ல் வடித்தது
அன்று அழத் தெரியவில்லை
இன்று அழ முடியவில்லை!

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1