நீண்ட வருத்தம்...
ஆனந்தம் கொண்டோம்
ஆதாயம் கண்டவரைப்
பார்த்து...
ஆதங்கம் கொண்டோம்
தஞ்சை யில்
தமிழன் நிலை கண்டு
தமிழின் மொழி கண்டு!
ஆகாய கலசமும்
ஆதாய விலாசமும்
கிடைத்தது
அந்நிய மொழி க்கு!
எம் மொழிக்கு
என்ன பெருமை!
விட்டு கொடுத்த தை
தவிர...
விண் நின்று பார்க்கும்
எம் முன்னோருக்கு
மண் நின்று பார்த்து
நான் - என் சொல்ல?
மன்னிப்பை தவிர
பெரிய கோவில்
குடமுழுக்கு
இல்லை இல்லை
பிரகதீஸ்வரர் ஆலய
கும்பாபிஷேகம்
இனிதே
சிறப்புற நடைபெற்றது!
இதில்
தமிழனுக்கு என்ன
சிறப்பு
எம் - தமிழுக்கு
என்ன சிறப்பு!
அதிகாரம் வென்றது
ஆன்மீகம் வென்றது
சரி
ஆகமம்!
என் ஆசை மொழியில்
இல்லையே
தமிழ் வழியில்
இல்லையே!
வேகம் கொண்ட
இனம்
வெட்கம் கெட்டுப்
போனதே - இது
என்ன குணம்!
பொறுமை மிகு
பெருவுடையார்
இதை
பொறுத்துக் கொள்ளலாம்!
பெருமை மிகு -எம்
மொழி பற்று வுடையார்
இதை பொறுத்தாள
மாட்டான்!
இதில்
வெட்க மொன்றுமில்லை
யாவருக்கும்...
இதுவும்
ஒரு நாளாய்
கடந்து போகும்!
ஆனால்
வெகு காலம்
நம்மில் காயமாகும்!
தமிழன் தமிழ், என்ற
உணர் வெல்லாம்
தேர்தல் நேர
பேச்சாகி விட்டது!
அது சரி-
அவரவருக்கு
ஆயிரம் வேலை கள்...
ந(எ)மக்கு இதுவும்
ஒன்றாய்!
அண்டி பிழைப்பதை
பழக்கமாகி விட்டது
ஆகவே
அந்நிய மொழிக்கு
துணை யாய்
தாய்மொழி இருப்பதில்
யாவருக்கும்
வருத்தமாய் இல்லை
வருத்தமே இல்லை!
வேதனையு மில்லை!
விண்ணை பிளக்கும்
கோசம்
தென்னாடுடைய சீவனே
போற்றி!
ஆம்
சிவனைப் போற்றும்
நம் மொழி
மறந்தவர்களும்
தென்னாட்டில் தான்!
வியப்புற்றேன்!
கடல் அலையென
மிகப் பெருங் கூட்டம்!
இது
அன்று வந்து
நின்று இருந்தால்
உரிமை கேட்டு
ஒற்றுமையாக
இணைந்திருந்தால்...
இன்று
நம் மொழி
செம்மொழி யில்
நடந்திருக்கும்
குடமுழுக்கு!
இலவசங்கள் பெற்று
இயல்பாகி போன
வாழ்க்கையில்
மொழி உணர்வுக்கும்
இன உணர்வுக்கும்
ஏது முக்கியத்துவம்
இங்கு!.
நம்
இயலாமையின்
வெளிப்பாடு
என் நெஞ்சு
வெட்கம் உண்டது!
இவ் வேதனையின்
வேர்வை துடைக்கவே
முகம் கழுவி - என்
கண்ணீர் மறைத்தேன்!
ஏர்உழ
பின்செல்லும் கொக்காய்
இல்லாது
நன்னெறி செயலுக்கு
பின் செல்வோர் மக்காய்
போனது ஏன்?!
வருந்தி அழும் கூட்டம்
ஒன்று உண்டு
என்னைப் போல...
நாட்டமில்லா மனதுடன்
இதை கண்ட
அவர்களுக்கு
வணக்கம் சொல்லி
வணங்கி கொள்வேன்!
இறைக்கு
பிற மொழி மந்திரங்கள்
குறைக்கு
எம் மொழியில் வழிபாடு!
நன்றாக உளது
உங்கள் கூற்று
எல்லாம் சிவமயம்
அன்பே சிவமென
தமிழில் சொல்லாதீர்கள்
இனி
தனியாகச் சொல்லுங்கள்!
சூரிய சந்திரன்
உள்ளமட்டும்
தரணியிலே தமிழ்
நிற்கும், நிலைக்கும்
பிற மண்ணீயர்
பிற மொழி
தடுத்தாலும்...
இந்நிலை நிலைக்காது
இந் நிகழ்வுகளை
நினைக்கும்
நினைந்திருக்கும்!
மாறிவிட்ட சரித்திரம்
சரியாக
கொஞ்ச நாளாகும்
அஞ்ச வேண்டா(ம்)
தான் அறிவேன்!
அது
என் சாவிற்கு முன்
நடக்கு(ம்)மா
அதை தான் அறியேன்!
வேகங் கொண்ட
இனம்
வெட்கம் கெட்டு
போகுமோ...
இல்லை
இனி
விதைத்து விட்டு
போகுமோ!
தமிழர்களின்
வரிப்பண மெல்லாம்
இப்படி
வாரி வழங்குது
நரி குணத்தவருக்கே...
இனியும்
தமிழ் வெல்ல
முதன்மை கொள்ள
தன்மான மில்லா
தமிழக அரசுக்கும்
தரமில்லா மத்திய
தொல்லியல் துறைக்கும்
அரசியல்
ஆகம்ப் படி
தலை குனிந்து
முதுகு வளைந்து
முட்டி மடங்கி
இரு கரம் கூப்பி
விரல் தசம் சேர்த்து
விசம் சேர்க்காது
விசம்மம் சேர்க்காது
வேதனை மறைத்து
புன்னகையுடன்
நன்றியும்
வணக்கமும்
தெரிவித்து கொள்கிறேன்!
வணக்கம்.
வாழ்க தமிழ்
வளர்க தமிழகம்!
தேவா.
Comments
Post a Comment